
கடற்றொழில் வட மாகாணத்தின் உயிர் நாடிகளில் ஒன்றாகும். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் 35,000 இற்கும் அதிகமான குடும்பங்களின் அடிப்படை வாழ்வாதார நடவடிக்கையாக மீன்பிடி விளங்குகின்றது. இப் பிரதேசத்தில் வாழும் பெரும்பான்மையானோர் தம் சுக வாழ்விற்கு அவசியமான விலங்குப் புரதத்தை கடலுணவிலிருந்தே பெற்றுக் கொள்கின்றனர். 1980 களில் யுத்தம் ஆரம்பிக்க முன்னர் இலங்கையின் தினசரி மொத்த மீன்பிடியில் சுமார் 35 வீதம் மேற்குறிப்பிட்ட நான்கு மாவட்டங்களில் செறிந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இன்றோ, நீண்ட யுத்தத்தின் போது ஏற்பட்ட இடம்பெயர்வுகள் மற்றும் உபகரண, உட்கட்டமைப்பு இழப்புக்களிலிருந்து மீண்டெழ முயலும் வட மாகாண மீனவர்கள் பலத்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர்.
உடலை வருத்தி, உயிரைப் பணயம் வைத்து கடுந்தொழிற் செய்யும் மீனவர்கள், தம் உழைப்பின் பலனைச் சரிவர அனுபவிக்க முடியாமல் இங்கு இயங்கும் சக்திவாய்ந்த நடுவர்களிடம் ஒருவித அடிமைத்தனத்தில் சிக்குண்டிருக்கின்றனர். வட மாகாணம் முழுவதும் பரந்திருக்கும் இந்த நடுவர் வலையமைப்பு இப் பிரதேச மீன்பிடித்துறையின் மீது ஏகபோக உரிமை கொண்டிருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். மீனவர்கள் பலரும் இந் நடுவர்களிடம் சுழற்சிக் கடன் பெற்றே தொழில் செய்கின்றனர். கடலுணவு பதனிடும் தனியார் கம்பனிகள் கூட மீனவர்களுக்குக் கூடுதற் பயன் சேர்க்கும் மீன்பிடிக் கூட்டுறவுச் சங்கங்களிடமிருந்து கடலுணவைக் கொள்வனவு செய்யாது – கூட்டுறவுச் சங்கங்களை ஓரங்கட்டி தமக்கு நெருக்கமான நடுவர்களூடே தான் வணிகம் செய்கின்றன. மேலும், மீனவர்கள் தம் பிடியைச் சரியாகப் பேணாது போவது பதனிடு தொழிற்சாலைகளுக்குக் கையளிக்க முன்னரே பிடியின் பெறுமதியை வெகுவாகக் குறைத்து விடுகின்றது. இலங்கைக் கடல் எல்லைக்குள் தமிழ் நாட்டு மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியும், சட்டத் தடையின் பின்னும் தடையின்றிச் செழித்தோங்கும் இழுவைப் படகு மீன்பிடி முறையும் வட மாகாண மீன்பிடித் துறையின் நீண்ட கால எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கி வருகின்றது.
நிலைமை இப்படியிருக்க, டெக் சிலோன் இயக்குனர் ஒருவர் வட மாகாண மீன்பிடித் துறையில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் தன்னார்வ ஆய்வாளர்கள் சிலரோடு இணைந்து அண்மையில் நெதர்லாந்து நாட்டின் பிரதான கடலுணவு இறக்குமதித் துறைமுகப் பிரதேசமான ஸ்பாக்கன்பேர்க் நகரிற்குச் சென்றிருந்தார். ஸ்பாக்கன்பேர்க் நகரிலிருக்கும் நவீன கடலுணவு பதனிடும் தொழிற்சாலையொன்றை இவர்கள் பார்வையிட்டதோடு, நெதர்லாந்தில் கடலுணவு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சில முக்கியஸ்தர்களையும் சந்தித்தனர்.
வட மாகாண கடற்றொழிற் துறையை வளப்படுத்தும் முகமாக குறிப்பாக, கடற்றொழிற் துறையில் நெதர்லாந்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்பங்களை எம் மீனவர்களுக்கு அறிமுகப்படுத்துவது தொடர்பாக அங்கு சந்தித்த நபர்களோடு மேலும் நெருங்கிப் பணியாற்ற டெக் சிலோன் ஆர்வம் கொண்டிருக்கின்றது.

தீவிரமான கலந்துரையாடலின் போது

கடலுணவுப் பதனிடும் தொழிற்சாலை

செத்தும் நாறாத மீன்

கடலுணவு பதனிடும் தொழிற்சாலையின் உட்புறம்