Milk_Processing.jpg

டெக் சிலோன் அண்மையில் புதுக்குளம், வவுனியாவில் அமைந்திருக்கும் வவுனியா பாற்தொழிற்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தது.

இப் பாற்தொழிற்சாலையானது சர்வதேச தொண்டு நிறுவனங்களான ஒக்ஸ்பாம் இன்டர்நஷனல் (Oxfam International), யூஎன்டிபி (UNDP), யூஎஸ்எய்ட் (USAID) முதலியவற்றின் நிதி உதவியுடன் 2008 இல் ஆரம்பிக்கப்பட்டது. இத் தொழிற்சாலை நாளொன்றுக்கு 1500 லீற்றர் பாலைப் பதனிடக் கூடிய கொள்ளளவைக் கொண்டது. மேலும் இத் தொழிற்சாலை முற்றிலும் நவீன இயந்திரங்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாது, சர்வதேச தரத்திலான பாற்தரப் பரிசோதனை ஆய்வு கூடமொன்றையும் கொண்டிருக்கின்றது.

இத்தனை வசதிகளைக் கொண்டிருந்தும், இத் தொழிற்சாலை 2015 ஆம் ஆண்டிலிருந்து இயக்கமின்றி ஓய்ந்துவிட்டது.

இப் பின்னணியில், வவுனியா பாற்தொழிற்சாலைக்குச் சென்றிருந்த டெக் சிலோன் குழுவின் பிரதான குறிக்கோள்கள் வருமாறு: (i) தொழிற்சாலையினதும், பொருத்தப்பட்டிருக்கும் இயந்திரங்களினதும் தற்போதைய நிலையை ஆராய்தல்; (ii) இயந்திரங்கள் இயங்காமற் போனதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிதல்; மற்றும் (iii) இவற்றை மீளியக்குவதற்குச் செய்யப்பட வேண்டிய பணிகளைப் பட்டியற்படுத்தல்.

சேரலாதன் சிவசுப்பிரமணியம் என்ற இயந்திரவியற் பொறியியலாளரின் தலைமையில் பாற்தொழிற்சாலைக்குச் சென்றிருந்த டெக் சிலோன் குழுவினர் அங்கிருக்கும் பல முக்கிய இயந்திரங்களின் நிலை கவலைக்கிடமாகவிருப்பதைக் கண்டுகொண்டனர். பாச்சரைசர் (pasteurizer), ஆடை பிரிப்பான் (cream separator), கொழுப்புடைப்பான் (homogenizer), உறையுள் (incubator) என்பன கடுமையாகத் திருத்தப்படவோ, பிரதியிடப்படவோ வேண்டிய நிலையில் இருக்கின்றன. குறிப்பாக, பால் காய்ச்சப்படும் போது படியும் கல்சியம் பொஸ்பேட் திண்மக் கழிவுகள் பாச்சரைசர் தொகுதியில் அடிக்கடி கோளாறுகளைத் தோற்றுவித்து வருந்திருப்பது தெரிய வந்தது.

Inspection.jpg

இயங்காமற் போன இயந்திரங்களிலொன்று

எமது குழுவினர் இவ் உபகரணங்களின் தொழில்நுட்ப ஆவணங்களையும் விரிவாக ஆராய்ந்த பின்னர் மேற்சொன்ன பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்மொழிந்தனர். மேலும், வவுனியா பாற்தொழிற்சாலை நீண்டதோர் இடைவேளையின் பின்னர் மீண்டும் இயங்கத் தெண்டிக்கும் இச் சந்தர்ப்பத்தில் டெக் சிலோன் ஊழியர் தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கல் என்பன மூலம் சாலையின் முகாமையாளர்களின் இம் முயற்சிக்கு உறுதுணை செய்ய ஆர்வம் கொண்டிருக்கின்றது.