
யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பாற்பண்ணை வேளாண்மைக் கிளையான யாழ்க்கோ திருநெல்வேலியை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. யாழ்க்கோ எனும் நாமம் குடா நாட்டவரது நாவில் தாராளமாய்த் தவழும். யாழ்க்கோவின் உற்பத்திப் பொருட்களின் தரத்தைத் தரணி அறியும்.

யாழ்க்கோ சராசரியாக நாளொன்றிற்கு உள்ளூர் பாற்பண்ணையாளரிடமிருந்து 6000 லீற்றர் பாலைக் கொள்வனவு செய்து அதிலிருந்து காய்ச்சிய பக்கெற்றுப் பால், சுவையூட்டப்பட்ட பால், கட்டித்தயிர் (yogurt), குளிர்களி (ice cream), பால் இனிப்பு, நெய், தயிர், பன்னீர் என வித விதமான பண்டங்களை உற்பத்தி செய்கின்றது. யாழ்க்கோவின் பண்டங்கள் யாவும் நியாயமான விலையில் விற்கப்படுவது கூடுதல் விசேஷம்.

இருக்க, தற்போதைய பாற்தொழிற்சாலையின் கொள்ளளவு யாழ்க்கோவினால் சேகரிக்கப்படும் மொத்தப் பாலையும் பதனிடப் போதாது. தனது உற்பத்தியை விரிவாக்கவும், நவீன தொழில்நுட்பத்தினூடு அவ் உற்பத்திப் பொருட்களின் தரத்தையும் அவற்றின் ஆயுட்காலத்தையும் உயர்த்தவும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம் அண்மையில் புதிய விரிவாக்கத் திட்டமொன்றை அறிவித்திருந்தது. டெக் சிலோன் இத் திட்டத்தின் பிரதான தொழ்நுட்ப ஆலோசகராக இணைவதில் பெரு மகிழ்ச்சியடைகின்றது. திட்டத்தின் ஒப்பந்தம் கோரல், பரிசீலித்தல், இயந்திரக் கொள்வனவு மற்றும் நிறுவல், பாவனை மற்றும் பேணுகை எனும் அனைத்துக் கட்டங்களிலும் டெக் சிலோனின் கனமான உள்ளீடு திட்டத்தின் வளர்ச்சிக்கு உரம் சேர்க்கும்.